Friday, June 29, 2012

சத்யஜித் ரே-உலக சினிமாவை உயர்த்திப் பிடித்தவர்கள் (பாகம்-5)


உலகளவில் சிறந்த இயக்குனராக வெளிக்காட்டிய  Pather Panchali கு பின் ரே  'Aparajito' என்னும் படத்தை  உருவாக்கினார்.அந்த படமானது வெனிஸ் இல் தங்க சிங்கம் விருது வென்றது. இந்த விருதுக்குப்பின் உலக தரமிக்க இயக்குனர் வரிசையில் ரே சேர்ந்தார். அதன் பின் தொடர்ந்து ஒரு ஆண்டு இரு ஆண்டுகள் இடைவெளியில் படம் எடுத்துக்கொண்டு வந்தார். 

கலைஞன் என்பதை விட ரேவை சகலகலாகலைஞன் எனலாம்.  ஒரு சில படங்கள் இயக்கியப் பின்பும் கூட இயக்கத்தில்  மட்டும் தன் கவனத்தை செலுத்தாமல் தன் பாட்டனார் தொடங்கிய "Sandhesh" சிறுவர்களுக்கான இதழை புதுப்பித்தார், அதில் தொடர்ந்து சிறு கதைகள், ஓவியங்கள் என்று தனது பங்களிப்பை தன் வாழ் நாள் முழுவதும் செவ்வனே செய்தும் வந்தார். அத்தோடு இல்லாமல் கதை, தொகுப்புகள், நாவல் என்று வங்காள மொழியிலும். சிறுவர்களுக்கான துணிகர (adventure) , உளவியல் கதை, தேவதை கதைகள், மாயஜாலம், அறிவியல் தொழில்நுட்பம் கொண்ட கதைகள் மற்றும் சிலிர்ப்பூட்டும் பேய் கதைகள் என்று எழுதி சிறுவர்கள் மனதையும் கொள்ளை கொண்டார். 


ஆண்டுக்கு ஒரு படம் இயக்கி  வந்த ரே 1984 இல் Ghare-Bhaire என்னும் ராபிந்தரநாத் தாகூர் எழுதிய நாவலை தழுவி படம் எடுக்கத் தொடங்கினார். அந்தக்காலக்கட்டதில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட ரே உடல் ரீதியாக இன்னலுக்கு ஆளாக,அவரது மகனான சந்திப் அந்த படத்தினை தொடர்ந்து தயாரிக்கும் பொறுப்பேற்று  மக்கள் மத்தியில் களம் இறக்கினார். உடல் நலக்கோளாறால் நான்கு ஆண்டுகள் தனது சினிமா வாழ்கையில் இருந்து விலகி இருந்த ரே,பின்பு மூன்று படங்கள் தொடர்ந்து எடுத்தார்.

ரே வின் படங்கள் பெரும்பாலும் இயற்கையோடு சம்மந்தப்பட்ட விஷயமாகவே இருக்கும்.கிராம சூழல், எளிமையான ஆடை அலங்காரம், வண்ணங்களின் வெளிப்பாடு, மக்கள் மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடு, பழக்க வழக்கம், பண்பாடு, எளிமையான வசனம், கலைகள் போன்ற கலா அம்சம் பெற்ற படங்களாக ரேவின் திரைப் படங்கள் இருக்கவே, மற்ற இயக்குனர் இயக்கிய படங்களில் இருந்து வேறு பட்டு  புதுமையாகவும் வித்தியாசமாகவும்  ரேவின் படங்கள் மக்களை சென்றடைந்தது,வெற்றி மேல் வெற்றியும் வந்து சேர்ந்தது.


ரே மொத்தம் 36 குறும்படம் மற்றும் படங்கள் இயக்கியுள்ளார்.அதில் முக்கால் சதவிகிதம்  நாவல் தழுவி எடுத்ததாகவே இருக்கும். தான் கதை எழுதி படம் இயக்குவதைவிட விட மற்ற கதைகளை பெற்று இயக்குவதையே பெரிய சவாலாக கொள்வதாக தனது குறிப்பிலும் குறிப்பிடுகிறார்.


படத்தின் வெற்றிக்கு  இசையும் இன்றியமையாத காரணம் என்று அறிந்திருந்த ரே  தனது முதல் படமான Pather Panchali யில் இந்திய இசை மேதையான பண்டிட் ரவி ஷங்கரை பயன்படுத்தி இருப்பார். இதன் மூலம் இசை ஆர்வம் மிகுந்தவர் ரே என்பதையும் உணர முடிகிறது.


இப்படிப்பட்ட கலைஞருக்கு  1992 இல் Oscar மேடை வாழ் நாள் சாதனை விருதை வழங்கி பெருமை கண்டது. இந்தியா பாரத ரத்னா விருதை வழங்கி பேரானந்தம் கொண்டது.

இப்படி நாட்டுக்கும், வீட்டுக்கும்,சினிமா உலகிற்கும்  பெருமை சேர்த்து இந்திய சினிமாவை உலக அரங்கில் உயர்த்திய  ரே அவர்கள் 1992 ஏப்ரல் 23 இல் நம்மையெல்லாம் ஆளாத் துயரில் ஆழ்த்திவிட்டு உயிர் பிரிந்தார்.

காத்திருங்கள்..
வரும் வாரத்தில் உங்கள சந்திக்க வருகிறார் அகிரா..



Widget byLabStrike


2 comments: