Tuesday, January 29, 2013

ப்ளூ கிராசும் vs மனிதநேயமும்


நான் என் தோழியின்  வீட்டுக்கு சென்றிருந்தேன்.அவரின் பக்கத்து வீட்டில் ஒரு நாட்டு நாய்க்குட்டி கட்டிப்போடப் பட்டிருந்தது.பார்க்க உயர் ரக நாயைப்போன்று நல்ல வளமான உடல்வாகுடன் நாய்க்குட்டி அழகாய் இருந்தது.

அந்த வீட்டுக் குழந்தைகள் கட்டியணைத்து,முத்தமிட்டு அந்த நாய்க்குட்டிக்கு பால்,பிஸ்கட் என மாறி மாறி உபசரித்து நன்கு கவனிப்பதையும் என்னால் காண முடிந்தது. விசாரித்த போது அது அனாதையாக தெருவில் சுற்றி திரிந்ததாகவும்,தெருநாய்கள் அதை கடித்து துன்புறுத்தியதாகவும்,அவைகளிடமிருந்து அந்தக்குட்டியை மீட்டு அதன் காயத்திற்கு மருந்திட்டு,தோல் வியாதியைப் போக்கி அவர்கள் வீட்டில் கட்டிப்போட்டு வளர்ப்பதாகவும்,அவிழ்த்துவிட்டால் மீண்டும் தெருநாய்கள் தாக்கும் அபாயம் அங்கிருப்பதாகவும்  கூறினார்கள். நாய்க்குட்டி கட்டப்படிருப்பதால் கத்திக்கொண்டிருந்தது.அது இயல்புதானே.

அப்போது அந்த வழியே டூவீலரில் சென்ற ஒரு பெண்மணி ஒருவர் தன்  வண்டியை நிறுத்தி ,அந்த நாய்க்குட்டியை கட்டிப் போட்டிருப்பவர்கள் யாரென வினவினார்.பின் அவர்களிடம் சென்று தான் ப்ளூ கிராஸ் என்றும் நாய்க்குட்டியை அவிழ்த்து விடும்படியும் சத்தம் போட்டார்.

அந்த வீட்டினர் நாய்க்குட்டி அவிழ்த்து விடப்பட்டால் மீண்டும் தெருநாய்கள் கடிக்க வாய்ப்பிருக்கிறது என்று எவ்வளவோ கூறியும் ப்ளூ கிராஸ் விடுவதாக இல்லை..பின் சில சலசலப்புக்குப்பின் பின் நாய்க்குட்டி அவிழ்த்து விடப்பட்டது.விடுபட்ட மகிழ்ச்சியில் நாய்க்குட்டி வெளியே ஓடியது.

விடுவித்துவிட்ட மகிழ்ச்சியிலும்,தான் வெற்றி பெற்ற மிதப்பிலும்,நாய்க்கு தம்மால் சுதந்திரம் கிடைத்து விட்டது போன்ற எண்ணத்திலும் அப்பெண்மணி தன் டூவீலரில் விடைப்பெற்றார்.

ஓடிய வேகத்தில் அந்த நாய்க்குட்டி தெரு நாய்களிடம் மாட்டி கடிபட்டது..கத்தியது..காயங்களுடன் அலறியது,ஓடியது..இப்போது நாய்க்குட்டியை காக்க அங்கு ப்ளூ கிராஸ் இல்லை..

மனிதநேயத்தில் நாம பண்ணோம் ,நாயால இது நமக்கு தேவையா ?என முனகியபடி அந்த வீட்டுக்காரர்களும் உள்ளே சென்றனர்..

யாருமற்ற அனாதையாய் நாய்க்குட்டி மட்டும் ரோட்டில்..


Widget byLabStrike


No comments:

Post a Comment