Saturday, February 14, 2015

காதலின் நிறம்!



காதலின் நிறம் தேடி
கடும்பயணம் மேற்கொண்டேன்..

போகும் வழிதனிலே
பெண்ணிடத்தில் கேட்டுப் பார்த்தேன்
வெளிர் சிவப்பு நிறமென - அவள்
என்னிடத்தில் சொல்லிப்போனாள்..

ஆணிடத்தில் அதையே கேட்டேன்
அடர் சிவப்பு நிறமென
அவனும் அங்கே சொல்லிப்போனான்..

காதலின் உணர்வை
நீளம் ஆக்குவது நீலம்
அதுவே காதலின் நிறமென்றார் சிலர்..

பசுமை, வளர்ச்சி
காதலின் வெற்றி நிறம்
பச்சை என்றார் பலர்..

மங்களம் பொங்கும் நிறம்
மஞ்சள் 
அதுவே காதலுக்கு மகிமை என்றார் சிலர்..

சமாதான  நிறம் வெள்ளை 
காதலின் நிறமாய்
அதை ஏற்போம்  என்றார் பலர்..

கடைசிவரை கருப்பை மட்டும்
எவரும்
கணக்கில் எடுக்கவே இல்லை..

ஏன் என்றேன்?

கருப்பு துக்கமென்றார்
எதிர்ப்பு என்றார்
இருட்டு என்றார்
அபசகுனம் என்றார்
அழகில்லை என்றார்
அசிங்கம் என்றார்

குறுக்கிட்டு ....

காதல் மலரும் 
இடம் எதுவென கேட்டேன்? 
கண்ணில் உருவாகி
காதல்
கருவாகும் இடம்
இருட்டான இதயம் என்றார்..

காதலர் விரும்பும் 
பொழுது  எதுவென கேட்டேன்?
மதிமங்கும் மாலை
கட்டித் தழுவ
அணைத்துப் புணர
இரவு என்றார்..

ஊடல் இல்லா 
நேரம்  எதுவென கேட்டேன்?
சண்டை
சமாதானமாகும்..
முத்தம் மட்டுமே
சத்தமாகும்..
நடுநிசி என்றார்...

முத்த நிறம் 
எதுவென கேட்டேன் ?
அணைத்து உதட்டை
நனைக்கும் போது
கண்கள் தானாய் மூடிட
கருப்பாய் உலகமென்றார்..

கருப்பு அழகென்பேன்
கருப்பு மங்களம் என்பேன்
கருப்பு  சுகம் என்பேன்
கருப்பு களிப்பு என்பேன்
கருப்பே காதல் என்பேன்..

காதலின் நிறம் தேடி
கடும்பயணம் மேற்கொண்டேன்..
கருப்பே காதலின் நிறமென்று
கடைசியில் கண்டுகொண்டேன்...



Widget byLabStrike


No comments:

Post a Comment